Friday, February 03, 2006

போரின் கருவியாக பாலியல் வல்லுறவு


என்.சரவணன்

ஸ்ரீலங்கா அரசின் சிங்கள இராணுவத்தின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புப் போரில் பொது மக்களை ஏமாற்றி மசிய வைக்க ஒரு தடவை பேச்சுவார்த்தை சமாதான நாடகமாடியது. உலக நாடுகளை தம்பக்கம் ஈர்ப்பதற்காக தீர்வுப் பொதி நாடகம் ஆடியது. இன்று சிங்கள பௌத்த பேரினவாத கட்டமைப்பின் தமிழ் மக்கள் குறித்தும் வரலாறு குறித்தும் கட்டமைக்கப்பட்டுள்ள கருத்தியல்களை மாற்றியமைக்காமல் எதையும் செய்ய முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது.
இந்தப் பேரினவாதக் கட்டமைப்பை வளர்த்தெடுக்க எந்த ஆதிக்க சக்திகள் காரணமாக இருந்தனவோ இன்று அதே சக்தியானது ஆதிக்க விரும்பினாலும் கூட தான் வளர்த்துவிட்டுள்ள கட்டமைப்பு அப்படிப்பட்ட ஒரு தீர்வுக்கு ஆதரவு தரப்போவதில்லை என்பதையும், அது ஆதிக்க சக்திகளின் இருப்புக்கே உலை வைத்துவிடும் என்பதும் அம்பலப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சமாதான முயற்சி, பேச்சுவார்த்தை, போர் நிறுத்தம், தீர்வு என்பவற்றை எதிர்க்க சிவில் சமூகமே தயாராகி வருவதை தென்னிலங்கையின் அண்மைய நிகழ்வுகள் நிரூபித்து வருகின்றன. இந்த நிலையில் அரசு விரும்பியோ விரும்பாமலோ தனது இருப்புக்காக போரை நடத்தியேயாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதற்காக எவ்வளவு பெரிய இழப்புகளுக்கும் முகம் கொடுக்க சிவில் சமூகம் பழக்கப்பட்டு-பழக்கப்படுத்தப்பட்டு வருகிறது. தென்னிலங்கையில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம், பொருள் விலையுயர்வு, தீர்வைகளின் அதிகரிப்பு, வேலையில்லா திண்டாட்டம் என்பவற்றைக் கூட போரின் பேரால் நியாயப்படுத்துவதை எதிர்த்து பெரிய எதிர்ப்பு "நடவடிக்கைகள்" எதுவும் இல்லை.
அரசின் அரசியல் தந்திரோபாய நடவடிக்கைகளில் ஒன்றாகவே இன்று போர் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட் நிலையில் தான் போரின் எதிர் விளைவுகளை சந்திப்பதாயிருந்தால் படையினரை உற்சாகப்படுத்தியே ஆக வேண்டும். படையினரின் உயிரிழப்புகள், படையின் ஏனைய பொருளிழப்புகள், முகாம் இழப்புகள் எனபனவற்றால் படையிலிருந்து வெளியேறுவோரின் தொகை அதிகரித்து வருகின்ற அதே நேரம் புதிதாக சேருவோரின் தொகை குறைந்துக் கொண்டே வருகிறது. தென்னிலங்கையில் வீடுகளில் பெற்றோரை மிரட்டுகின்ற பேச்சாகவே "படையில் போய் சேர்ந்து விடுவேன்" என்பதைக் காண முடிகிறது.
இந்த நிலையில் உள்ள படையினரை தொடர்ந்து தக்க வைக்கவும், புதிதாக படைக்குச் சேருவதை ஊக்குவிக்கவும் பல வழிமுறைகைளைக் கையாள்கிறது. படையில் இணைவோருக்கான சம்பள, சலுகைகள் அதிகரிப்பு அவற்றில் முக்கியமானவை. இது போன்ற வழிமுறைகளில் ஒன்றே படையினரின் போர்க்கால குற்றங்களை பொருட்படுத்தாமை என்பது.
அந்த போர்க்கால குற்றங்களில் பாரிய ஒன்றாக தமிழ்ப் பெண்களின் மீதான பாலியல் வல்லுறவு நிகழ்கிறது. இது வெளிப்படையாக பாலியல் இச்சை சார்ந்ததாக காட்டப்பட்டாலும் அதற்கும் அப்பாலான பொருண்மைகள் உள்ளன.
இதற்கான உள்ளார்ந்த அனுமதி படையில் இருப்பதை நிலைமைகள் வெளிக்காட்டியுள்ளன. இது பெரியளவில் பிரச்சாரப்படாமல் எதனையும் செய்யலாம் என்கின்ற நிலைப்பாடு படையில் இருப்பதையே காட்டுகிறது.
1994இல் பதவிக்கு வந்த பொ.ஐ.மு. அரசாங்கம் அதே ஆண்டு இறுதியிலிருந்து நடத்திய பேச்சு வார்த்தைகள் 1995 ஏப்ரலில் முறிவடைந்தது. 1995 ஒக்டோபரில் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையின் மூலம் யாழ் குடா நாட்டைக் கைப்பற்றிய அரசாங்கம் அது தொடக்கம் யாழ் குடா நாட்டை ஒரு மூடுண்ட பிரதேசமாகவே ஆக்கி வந்தது. வெளியுலகத்துக்கு அங்கு இராணுவத்தைக் கொண்டு சிவில் நிர்வாகத்தை நடாத்தி வருவதாகவும் பிரச்சாரப்படுத்தியும் வந்தது.
போரினால் அரசு சந்தித்து வந்த தொடர் தோல்விகளினால் படையினரின் உளநிலை வீழ்ச்சி கண்டிருந்தது. இதேவேளை மூடுண்ட பிரதேசமாக இருந்த யாழ் குடா நாட்டில் பல நூற்றுக்கணக்கானோர் காணாமல் போனோர்கள். அடிக்கடி ஆங்காங்கு சடலங்கள் கிடைத்துக் கொண்டிருந்தன.
மனித உரிமைகள் அமைப்புகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களைக் கொண்டு மாத்திரம் ஏறத்தாழ 600க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தெரிவித்த போது அதனை முறையாக எதிர்கொள்ளவில்லை.
இப்படிப்பட்ட நிலையில் தான் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருந்தன. வடக்கு கிழக்குப் பகுதிகளில் படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் படையினராலேயே மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் குறித்த உண்மைகளை வெளிக் கொணர்வது எவருக்கும் அவ்வளவு இலகுவான காரியமாக இருக்கவில்லை.
பொதுவாக போர்க்காலங்களில் இந்த பாலியல் வல்லுறவுக்கூடாக ஒரு சமூகத்தை அவமானத்துக்குள்ளாக்க எதிரித் தரப்பு நம்புவது வழக்கம். இது ஹிட்லரின் நாசிப் படைகள் தொடக்கம் அண்மைய பொஸ்னிய-சேர்பிய போர் வரை காணமுடியும். பொஸ்னிய இனத்தின் தூய்மையைக் கெடுக்க வேண்டுமானால் அவ்வினத்தின் பெண்களின் மீது பாலியல் வல்லுறவு கொண்டு இனக்கலப்பு செய்து விட்டால் அது நடக்கும் என சேர்பியர்கள் கருதினார்கள். அதன் விளைவாக பொஸ்னியப் பெண்களை சிறைப்படுத்தி அவர்களுக்கென்று தனியான முகாமமைத்து அவர்களை சேர்பியர்கள் சென்று மாறி மாறி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி அவர்களை கர்ப்பம் தரிக்கச் செய்து பிள்ளை பெற வைத்தனர். பின்னர் பிறந்த அப்பிள்ளை என்ன இனம் என்று கேலி செய்தனர். நூற்றுக் கணக்கான பெண்களுக்கு இந்த கதி ஏற்பட்டது. இந்த இனக்கலப்புக்கூடாக அவ்வினத்தின் தூய்மையைக் கெடுத்து விட்டதாகவும், களங்கப் படுத்தி விட்டதாகவும், புனிதம் கெடச் செய்து விட்டதாகவும் பொஸ்னியர்களுக்கு அறிவித்தார்கள்.
இப்படி யுத்த காலங்களில் எதிரித் தரப்பின் பெண்கள் படையினருக்கு விருந்தாக ஆக்கப்படுவதும் பலருக்கான பாலியல் போகப்பொருளாக, பாலுறவு இயந்திரமாக ஆக்கப்படுவதும் அங்கு மட்டுமல்ல இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஜப்பானியப் படைகள் கிழக்காசிய நாடுகளில் புரிந்த கொடுமையும் இவை தான். அவை நீண்ட காலமாக வெளித் தெரியாமல் இருந்து மிக அண்மையில் தான் பெண்களை பாலியல் அடிமைகளாக முகாம்களில் வைத்திருந்த விடயங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. இந்தோனேசிய, பிலிப்பைன்ஸ், மற்றும் கொரியா உள்ளிட்ட நாடுகள் பலவற்றில் பெண்கள் பலர் தடுத்து வைக்கப்பட்டு படையினரின் பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்தி வந்த சம்பவங்கள் உலகையே உலுக்கியது.
எதிரி நாட்டுப் படையினர் மீது நடத்தப்பட்டு வந்த இத்தகைய மனிதநேயமற்ற சம்பவங்களே இலங்கையிலும் நடந்து வருகின்றன.
அண்மையில் கூட இந்தோனேசியாவில் சுகர்னோ அரசாங்கத்துக்கு எதிரான கிளர்ச்சியின் போது சீன நாட்டைச் சேர்ந்த பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட செய்தி இன்று உலகப்புகழ் பெற்றவை.
இன்று நடக்கும் யுத்தம் எதிரி நாட்டுடனான யுத்தமென்பதையும் தமிழ்ப் பெண்கள் தங்கள் நாட்டுப் பெண்களில்லை வேற்று நாட்டுப் பெண்களே என்பதையும் தெளிவுறுத்தியது இதே அரச படை தான். இராணுவத்தின் ஆட்சேர்ப்பு தமிழ் மக்கள் மட்டும் தேடி வேட்டையாடப்படல் என்பவற்றின் வெளிப்பாடுகள் அத்தனையும் இது சிங்களப் படை தான் என்பதை நிரூபித்தது. எனவே ஸ்ரீ லங்கா அரச படையும் வேற்று நாட்டுப் படையெனும் உணர்வும், ஆக்கிரமிப்பு இராணுவம், எதிரிப் படை என்கின்ற மனப்பதிவுக்கும் தமிழ் மக்கள் உள்ளாகினர்.
ஸ்ரீ லங்கா படையை அப்படி சிங்களப் படை, எதிரிப் படையென்று சொல்வதற்கு முழுத் தகுதியையும் அடைந்திருக்கிறது.
(சிங்களப் படையென்ற சொல் இனவாதத்தை வெளிப்படுத்துவதாக சொல்கிறார்கள் ஆனால் சிங்களவர்களை மட்டுமே கொண்ட படையாகவும் எதிரிநாட்டின் மீது யுத்தம் செய்வது போல யுத்தக் குற்றங்களில் ஈடுபடுவதாலும் இப்பதம் பொறுத்தமானதே)
எனவே இப்படிப்பட்ட சிங்களப் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பாலியல் வல்லுறவுகள் தமிழ் மக்களின் இனத்துவத்தை அவமானப்படுத்த பயன்படுத்துகின்ற ஒன்றாகவே கொள்ள முடிகிறது.
ஆனால் தற்செயலாக கிருஷாந்தி குமாரசுவாமி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதும், கிருஷாந்தியைத் தேடிச் சென்ற அவரது தாயார், சகோதரன், அயலவர் ஆகியோரையும் கொன்று புதைத்த சம்பவம் தற்செயலாக அம்பலத்துக்கு வந்ததும் (கிருஷாந்தி குடும்பத்தின் வர்க்கப்பின்னணி காரணமாக அதற்கு தொடர்புசாதனங்கள், பெண்கள் அமைப்புகள், சட்ட உதவிகள் வாய்;ப்பாக அமைந்ததால்) அது உலக அளவில் அரசை அம்பலத்துக்கு கொண்டு வந்தது.
தவிர்க்க இயலாமல் இதனைப் பயன்படுத்தி அரசு போர்க் குற்றங்களுக்கு எதிராக எப்போதும் இருப்பதாக பிரச்சாரப்படுத்துவதற்காக கிருஷாந்தி வழக்குக்கு அரச முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டது. அதன்படி 20 மாதங்களாக நடந்த கிருஷாந்தி வழக்கின் தீர்ப்பாக 6 பொலிஸாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதைச் சொல்லியே அரசு இன்றும், பாதிக்கப்படும் பெண்கள் மீதான தனது கரிசனையை பிரச்சாரப்படுத்தி வருகிறது. இந்த பிரச்சாரங்களின் முன்னால் ஏனைய சம்பவங்கள் அனைத்தையும் மூடி மறைத்து வருகிறது. ஏனைய சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் சமூக அளவிலும் அந்தஸ்துடையவர்கள் அல்லர்.
இன்று வெளிக் கொணரப்படுகின்ற சம்பவங்கள் அனைத்துமே பாதிக்கப்பட்ட பெண் செத்தால் மாத்திரம் தான் சாத்தியமாகிறது. பெண்ணியவாதியான ஷாமினி பெர்ணாண்டோ இது குறித்து கருத்து தெரிவிக்கையில் "ஒரு பெண் படையினரால் தனக்கு ஏற்பட்ட அவலத்தை சட்டத்தின் முன் கொண்டு வர வேண்டுமெனில் நிச்சயம் சாகத்தான் வேண்டுமா," என வினவுகிறார். உண்மையில் இன்று வழக்கு தொடரப்பட்டிருக்கும் சொற்ப சம்பவங்களைத் தேடிப்பார்த்தால் அவை பாலியல் வல்லுறவின் பின்னர் கொலை செய்யப்பட்டவர் குறித்தானதாகத் தான் இருக்கின்றது. கிருஷாந்தி, ராஜினி, கோணேஸ்வரி போன்றன நல்ல உதாரணங்கள்.
இதே வேளை இது வரை சிங்களப் படையினரால் மேற் கொள்ளப்பட்டு வந்திருக்கிற பாலியல் வல்லறவு சம்பவங்கள் அனைத்திலும் பெண் அதிக சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளாள்.
97 ஒக்டோபர் 16 அன்று அம்பாறையில் பொலிஸாரும் படையினரும் தங்கநாயகி எனும் பெண்ணை கூட்டாக பாலியல் வல்லுறவு கொண்டு விட்டு அப்பெண்ணின் பெண்குறியை வெட்டி சின்னாபின்னப்படுத்தி விட்டே சென்றனர். அதே போல 97 மே 17 அம்பாறையில் கோணேஸ்வரி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பின்னர் கோணேஸ்வரியின் பெண்குறியில் கிரனைட் வைத்து தகர்த்தனர். பெரும்பாலும் பாலியல் வல்லறவின் பின் கொலையும் செய்து வந்திருக்கின்றனர். இதன் மூலம் சகல சாட்சிகளையும் இல்லாது போய்விடுமென்றே சிங்களப் படையினர் கருதியிருப்பர்.
இதை விட இது வரை காலம் போரின் போது கைது செய்யப்பட்ட பெண் புலிகள் பலரை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டமை குறித்த சம்பவங்கள் 94க்கு முன்னர் அதிகளவு தகவல் கிடைத்திருந்தன. இன்று அப்படிப்பட்ட தகவல்கள் பெறுவது கடினமாக இருக்கிறது. ஆனால் உயிர்விடும் தறுவாயில் பிடிக்கப்பட்ட பெண் போராளிகளை நிர்வாணப்படுத்தி பாலுறுப்புகளில் போத்தல்களாலும், கம்பிகளாலும் சேதப்படுத்துகின்ற புகைப்படங்களின் மூலம் கடந்த அரசாங்கங்களைப் போலவே இந்த அரசாங்கத்திலும் இடம் பெற்று வருவதை காண முடிகிறது. குறிப்பிட்ட தாக்குதல் சம்பவம் முடிந்ததும் மரணமுற்ற பெண் போராளிகளை நிர்வாணப்படுத்தி காட்சிப்படுத்தப்பட்டதை தொலைக்காட்சி செய்திகளிலும் காட்டப்பட்டது. அவை பற்றிய புகைப்படங்களும் கிடைத்திருக்கின்றன.
இதன் மூலம் எதிர்பார்க்கப்படுவது என்ன? குறிப்பிட்ட சமூகத்தை அவமானப்படுத்தி விட்டதன் களிப்பையல்லவா? ஏற்கெனவே சமூகத்தில் ஒருவர் தனக்கு வேண்டாத இன்னொருவரை அவமானப்படுத்த வேண்டுமென்றால் அவருக்கு கிட்டிய பெண்ணை வல்லுறவுக்குள்ளாக்குவேன் என்று கூறினாலே மற்றவர் ஆத்திரப்படுவார் அல்லவா? அப்படிப்பட்ட வெளிப்பாடொன்றே இந்த நிர்வாணக் காட்சிப்படுத்தலும்.
"தமிழ் மக்களை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுப்பதற்காக நடத்தப்படும்" சமாதான யுத்தத்தின் மறு பக்கம் எவ்வளவு கோரமானது என்பதைக் காட்ட தமிழ் மக்களுக்கு எதிரான இந்த சம்பவங்கள் போதுமானது. அரசாங்கத்தின் சர்வதேச பிரச்சாரங்கள் சமீப காலமாக தோல்வியடைவதற்கு ஒரு காரணம் போர்க்கால கொடுமைகளின் அத்தனை விபரீதங்களும் எல்லைத்தாண்டி போகுமளவுக்கு அதிகரித்திருப்பதே.
அரசு இவ்வாறான இம்சைகளின் வாயிலாக தமிழ் மக்களை பணிய வைத்து அரசு தரும் தீர்வினை ஏற்கச் செய்கின்ற நடவடிக்கையாக, போரின் கருவியாக, வதையின் கருவியாக, பாலியல் வல்லுறவு தொடர்ச்சியாக பாவிக்கப்பட்டு வருகிறது. அரச பயங்கரவாதத்தின் உச்ச வடிவம் இது தான். இது இனிமேல் தொடராது என்பதற்கான உறுதியை எவரும் தந்துவிடமாட்டார்கள்.
(பாலியல் வல்லுறவுக்குள்; பட்டியல்களும் இப்பத்திரிகையில் அடங்கியுள்ளன.)
மேலும் வாசிக்க...

Thursday, February 02, 2006

தமிழீழ ஒறுப்புச் சட்டமும், பெண்களின் உரிமைகளும்


-என்.சரவணன்

இன்று தென்னிலங்கையில் எவர் விரும்புகிற அல்லது விரும்பாத போதும் ''தமிழீழம்"" என்கின்ற அரசாங்கம் ஒன்று இயங்கி வருவதை நாம் அறிகிறோம். அந்த அரசாங்கம் அரசாக (State) இன்னும் ஆகவில்லை என்பதும் உண்மை. எவ்வாறாயினும் வடக்கில் எழுதப்படாத அரசியலமைப் பொன்று நடைமுறையில் இருக்கத் தான் செய்கிறது. அந்த எடுகோளிலிருந்து வடக்கில் அமுலாக்கப்பட்டிருக்கிற சட்டங்களை அலசிப்பார்ப்பது அவசியமானதொன்றே. அந்த வகை யில் ''தமிழீழ ஒறுப்புச் சட்டம்"" (Pநநெட ஊழனந ழக வுயஅடை நுயடயஅ) ('தண்டனை' இங்கு ''ஒறுப்பு"' என அழைக்கப்படுகிறது.) முக்கியமான ஒன்று. அச்சட்டத்தில் பெண்களது உரிமை பேணப்பட்டிருக்கிறதா? என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம். அதில் பெண்களுக்கான உரிமை பாதுகாக்கப்படக்கூடிய வகையில் சட்டம் ஆக்கப் பட்டிருக்கும் என்ற நம்பிக்கை கூட இருக்கிறதா? என்ற வினாவை ஒரு சிலர் எழுப்பக்கூடும். ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனது பொன்மொழிகள் என சொல்லப்படுப வையோடு இது எத்தனை தூரம் பொருந்துகிறது என்கின்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு இது பற்றிய விமர்சனங்களை முன்வைக்கலாம் என்று தோன்றுகிறது. வே.பிரபாகரன் சொன்னதை இங்கு நோக்குவோம்.
'பெண்கள் சம உரிமை பெற்று சகல அடக்குமுறையில் இருந்தும் விடுதலை பெற்று ஆண்களுடன் கௌரவமாக வாழக்கூடிய புரட்சிகர சமுதாயமாகத் தமிழீழம் அமைய வேண்டும் என்பதே எனது ஆவல் -தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன்" (ஆதாரம்:- நாற்று-2வது இதழ்-மாறன் பதிப்பகம், பக்கம்-6, தமிழீழ பெண்கள் ஆய்வு நிலையம்)
''ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பது ஆண்களு க்கு எதிரான போராட்டம் அல்ல. இது ஆணாதிக்க அறியாமைக்கு எதிரான கருத்துப் போராட்டமாகும்." (அதே நூல்-பக்கம்-31)
''பெண் விடுதலை என்பது அரச ஒடுக்குமுறையில் இருந்தும் சமூக ஒடுக்கு முறையிலிருந்தும் பொருளா தாரச் சுரண்டல் முறையிலிருந்தும் விடுதலை பெறுவதேயாகும்." (அதே நூல்- பக்கம்-35)
நடைமுறையில் உலகமெங்கும் சகல ஆட்சி நிர்வாக துறைகளிலும் ஆண்களது செல்வாககும் மேலாதிக்க முமே நிறைந்து காணப்படுவதை எவரும் அறிவர். சட்டமியற்றுதல், அதனை பிரயோகித்தல், என்பனவற்றைக் கூட ஆண்களே மேற்கொள்கின்றனர். எனவே ஆண்நிலைப்பட்ட ஆணாதிக்க தீர்மாணங்களும், முடிவுக ளுமே பொதுவாக பெண்கள்மேல் திணிக்கப்படுகிறது. எனவே பெண்கள் தொடர்பான மரபு ரீதியான கருத்தியல் சிந்தனையிலிருந்து வெளிவரும் சட்டங்களினால் பெண்கள் பல்வேறு முறைகளில் பாதிப்புக்குள்ளாகி வருவது சர்வசாதாரண நிகழ்வாகியு ள்ளது. அந்த எடுகோளுடன் பார்த்தால் 'தமிழீழ ஒறுப்புச் சட்டம்" கூட இவ்விடயத்தில் விதிவிலக்கல்ல. இனி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
தண்டனை
தண்டனைக்குரிய பதமாக தமிழீழ ஒறுப்புச் சட்டத்தில் "ஒறுப்பு" எனும் பதம் பிரயோகிக்கப்படுகிறது. இந்த தண்டனை விடயத்தில் எவருக்கெல் லாம் தண்டனை விதிக்கப்படல் வேண்டும் எனும் வறையறைக்குள் கீழ்வருமாறு கூறப்பட்டுள்ளது.
''குற்றவாளியாகக் காணப்படும் காலத்தில் கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு எதிராக மரண தண்டணை விதிக்க ப்படலோ, பதியப்படலோ ஆகாது. ஆனால் அதற்கு மாறாக கடுஞ்சிறை யொறுப்போ எளிய சிறையொறுப்போ வழங்கலாம்" (பார்க்க-Pஊவுநு-சரத்து-47)
கருவுற்றிருக்கும் காலத்தில் பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கக்கூடாது என சொல்லப்பட்டது சரி. ஆனால் கருவுற்றிருக்கிற பெண்ணுக்கு கடுஞ்சிறையொறுப்பு வழங்கலாம் என்ற விடயம் பாரதூரமானது. "கடுஞ்சிறையொறுப்பு" என்பதன் அர்த்தம் கடுமையான உடல் உழைப்போடு கூடிய தண்டனை என்பது குறிப்பிடத்தக்கது. (பார்க்க-Pஊவுநு-சரத்து-45.ஆ(1)).
ஏற்கனவே கருவளச் சுமை பெண்ணிடம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் "கடும் உடலுழைப்பு" என்பது மிகவும் மோசகர மான தண்டனையாகவே கொள்ள முடியும்.
அது தவிர அந்த குறிப்பிட்ட பெண்ணுக்கு மாத்திரமல்லாது கருவுற்றிருக்கும் அப்பெண்ணின் கருவளத்திற்கும் ஏற்படுத்தும் உடல், உள ரீதியிலான தண்டனையாகவே இதனைக் கொள்ள முடியும்.
எனவே, செய்த குற்றத்திற்கான தண்டனையாக எளிய சிறையொறுப்பு போதுமானதெனலாம் அதிலும் கருவுற் றிருக்கிற நிலையில் சிறைக்குள் அவளது செயற்பாடுகளுக்கான சுதந்திரம் வழங்கப்பட்டிருத்தல் வேண்டும்.
கருக்கலைப்பு
கருக்கலைப்பு சுதந்திரமென்பது ஒவ்வொரு பெண்ணினதும் முக்கியமான ஒன்றாதல் வேண்டும்.
ஒறுப்புச் சட்டத்திலும் இது விடயத்தில் பிழையான அணுகு முறைகளையே காணக்கூடியதாக இருக்கிறது. உதாரணமாக:
உயிரைக் காப்பாற்றும் நோக்குடன் மட்டுமே கருக்கலைப்பு செய்யலாம் அல்லாது போனால் 3 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய எவ்வகை சிறையொறுப்பும் வழங்கலாம். அப்பெண் உயிர்ப்புடன் துடிக்கும் கருவினை உடையவராக இருந்தால் ஏழு ஆண்டு சிறைத் தண்டனையுடன் குற்றக் காசிறுப்புக்கும் ஆளாதல் வேண்டும் என சொல்லப்பட் டுள்ளது. (Pஊவுநு -சரத்து-215)
சகல பெண்களும் விரும்பித்தான் கருவுறுகின்றனர் என்று கொள்ளவும் முடியாது. பாலியல் வல்லுறவுக்கூடாகவும், அவள் கருவைத் தாங்க நேரிடக்கூடும்;. (அது குடும்பத்தில் கனவனால் மேற்கொள்ளப்படும் பாலியல் வல்லுறவாகவும் இருக்கலாம்.) உற்ற கருவை கலைக்க முடியாமலும் போயிருக்கலாம். பாலியல் வல்லுறவு, அடிப்படையாக அமைந்தால் கருக்க லைப்பு செய்வதில் தவறில்லை என அதே சரத்தில் "புறநடை விலக்கு" எனும் பகுதியில் கூறப்பட்டிருக்கிறது. என்ற போதும் 'புறநடை விலக்கு" (2) இல் கருக்கலைப்பு செய்வதானால் ஆணினதும் 'இசைவு" தேவை என கூறப்பட்டுள்ளது.
கருவை சுமக்கும் பெண்ணிடம்தான் கருவை சுமக்கும் சம்மதம் பற்றிக் கேட்டறிய வேண்டுமேயொழிய கனவ னது இசைவை அங்கு வலியுறுத்துவது பாரதூரமானது. பெண் விரும்பாத போதும் ஆணின் நிர்ப்பந்தத்தால் இப்படி நடப்பதுவுமுண்டு. அதாவது கருவை சுமப்பவள், தான் விரும்பாத போதும் ஆணின் கட்டாய ஆணையின் பேரில் அதனை சுமக்க வேண்டும் என இதன் மூலம் மறைமுகமாக நிர்ப்பந்திக் கப்படுகிறது. அது மட்டுமன்றி ஆணாதி க்க திணிப்புச் சூழலும் பெண்ணடிமை கருத்தியற் சமூக அமைப்பும் இன்று "பாலியல் வல்லுறவு" என்பதை புறநிலையிலேயே கொள்கிறது. மனைவி விரும்பாத போதும் கனவனால் கட்டாய பாலியல் உறவுக்கு உள்ளாகும் வழமையான இயல்பு நிலையை பாலியல் வல்லுறவாக கொள்ளும் நிலை பல நாட்டு சட்டங்களில் இல்லை. எனவே இப்படியான சூழ்நிலையில் கருவை சுமத்தல் அல்லது கலைத்தல் தொடர்பான உரிமைகளை பெண்ணி டமே விட்டுவிட வேண்டும்.
கருக்கலைப்பு விடயத்தில் சில வேளை புலிகள் இயக்கத்தினர் தங்களது போர்க்கால மனித வள திரட்டலுக்கான (நீண்ட கால நோக் கைக் கொண்ட) - தந்திரோபாயமாக இதனைக் கொண்டிருக்கக் கூடும். என்ற போதும் போராட்டத்திற்கான பயன்படு த்தலுக்கு மாத்திரம் பெண்களைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களது உரிமைகளுக்கு எதிராக நடந்து கொள்கிறார்கள் என்ற அபிப்பிராயம் பரவுவதற்கும் இது வழிவகுக்கிறது.
மறுமணம்
"மறுமணம்" விடயத்தில் அது இப்படிக் கூறுகிறது. ''துணைவனோ, துணைவியோ உயிருடன் இருக்கும் போது அல்லது விவாகரத்து நடவாதிருக்கும் போது அவர்களில் எவரும் மறுமணம் செய்யக்கூடாதெ ன்றும் செய்தால் ஏழு ஆண்டுகள் வரை சிறைதண்டனை வழங்க வேண்டும். (Pஊவுநு-சரத்து 273) எனக் கூறப்பட்டி ருக்கிற போதும் அதன் 'புறநடை" பகுதியில் திருமணமான எவரும் துணைவியைப் பற்றியோ துணைவ னைப் பற்றியோ தகவல் எதுவுமில்லா மலிருப்பின் 5 வருடங்கள் காத்திருத்தல் வேண்டுமென நிர்ப்பந்திக்கிறது.
திருமணமான எவரும் துணைவி யைப் பற்றியோ துணைவனைப் பற்றி யோ தகவல் எதுவுமில்லாமலிருப்பின் 5 வருடங்கள் காத்திருத்தல் வேண்டு மென நிர்ப்பந்திக்கிறது.
திருமண கட்டமைப்பு என்பதே அது ஆண், பெண் ஆகிய இரு சாராரினதும் சகல சுதந்திரங்களையும் கட்டுப்ப டுத்தும் நிறுவனம் என்பது அறிந்ததே. பெரும்பாலும் திருமண கட்டமைப்பி னால் ஆணைவிட பெண், அதிக பாதிப் புக்குள்ளாகிறாள் என்பது இன்னொரு விடயம். இந்நிலையில் மேலே குறிப்பிட் டுள்ள 'காத்திருக்கும் வரையறை" என்பது அத்தியாவசியமானதென கருதமுடியாது.
பாலியல் வல்லுறவு
பாலியல் வல்லுறவு குறித்து பல விடயங்களை நல்ல முறையில் அணுகியிருக்கிற போதும் ஆங்காங்கு சில பலவீனங்களைக் காண முடிகிறது.
"பாலியல் வல்லுறவு குற்றம்" புரிந்த ஒருவருக்கு மரண தண்டனையோ அல்லது 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையுடன் கூடிய குற்றக்கா சிறுப்போ விதிக்கப்படுமென கூறுகிறது. (Pஊவுநு -சரத்து-279-(அ)) குற்றம் புரிந்தவர் 24 வயதையடையாதவராக இருப்பின் தண்டனையைக் குறைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது, என்ற போதும் 'பாலியல் வல்லுறவு" பற்றிய குற்ற வழக்கானது, அத்தவறு இழைக்கப்பட்டதிலிருந்து 3 மாதங்களுக்குப் பின் தொடரப்படலாகாது எனக் கூறப்பட்டு ள்ளது. (Pஊவுநு -சரத்து-283-(4)) சில நிர்ப்பந்தங்கள் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களாலோ முதல் மூன்று மாதங்களுக்குள் வழக்கு தொடர முடியாமல் போனவர்களுக்கு நீதித்துறை நீதி வழங்க முடியாது என கூறுவது சரியான ஒன்றல்ல.
இச்சட்டத்தில் "பாலியல் வல்லுறவு", "பாலியல் வன்முறை" இரண்டுக்கும் வௌ;வேறு அர்த்தங்கள் காட்டப்பட்டி ருக்கிறது. அந்த வரையறை இதுவரை வேறு யாரும் செய்யாத ஒன்று என்ற ரீதியில் தமிழீழ ஒறுப்புச் சட்டத்திற்கு பெருமையுண்டு. உதாரணத்திற்கு,
''ஆண் குறியை சிறிதளவு பெண்குறியினுள் நுழைத்தாலும் "பாலியல் வல்லுறவு"' நடைபெற்றதாகக் கொள்ளப்படும்" என்றிருக்கிறது.
''பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக அவளது பாலியல் உறுப்புக்களில் பாலியல் உணர்வுடன் அல்லது அவரை இழிவு படுத்தும் நோக்குடன் தீண்டுவது "பாலியல் வன்முறை"த் தவறாகும்" என்றும் கூறப்பட்டுள்ளது.
என்றாலும் இது தொடர்பாக ஒறுப்புச் சட்டத்திலுள்ள பலவீனமென்ன வென்றால் மேற்படி வரையறையிலிருந்து "பாலியல் வல்லுறவு" மற்றும் பாலியல் வன்முறை" ஆகியன ஆணொ ருவன் ஆண் மீது அல்லது பெண் பெண் மீது பிரயோகிக்கப்படும் 'பாலியல் வல்லுறவு"களையும் பாலியல் வன்முறைகளையும் கண்டும் காணாது விடுவதா என்ற கேள்வி எழுகின்றது. மேலும் இன்று குடும்பங்களில் கணவ னால் மேற்கொள்ளப்படுகின்ற பலாத்கார பாலியல் உறவுகளையும் இங்கு கவனத்தில் எடுக்க வேண்டியது அவசியம். சமூக யதார்த்த நிலையில் பெண், ஆண்மீது பாலியல் பலாத்காரம் பண்ணுமளவு நிலைமை இல்லை என்பதை நாமறிவோம். சில வேளை இது மிக அபூர்வமாகவே இடம் பெறும். ஆனால் ஆண், ஆண் மீது இக்குற்ற த்தை இழைப்பது இன்று சாதாரணமாகி வருவதை நடைமுறையில் அறிய முடிகிறது.
இதை விட "பாலியல் வல்லுறவு" (சுயிந) மற்றும் "பாலியல் வன்முறை" (ளுநஒரயட ஏழைடநnஉந) என்பதைப் போலவே 'பாலியல் தொந்தரவுகள்" (ளுநஒரயட னுளைவரசடியnஉந) என்ற ஒன்றை வேறுபடுத்தி பார்க்க வேண்டிய அவசியமும் உள்ளது. குறிப்பாக பாலியல் வக்கிர நோக்கில் தீண்டுவது, இழி சொற்களைப் பயன்படுத்துவது, மற்றும் தொடர்பு சாதனங்கள், கலை வடிவங்களுக்கூடாக பாலியல் ரீதியிலான இழிவுகளைப் பிரதிபலிக்கச் செய்தல். அசிங்கப்படுத்திக் காட்டுதல் என்பவற்றை வேறு படுத்தி இனங்காண வேண்டியதும் அவசியமானதாகும். இவ்வகையில் பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகளை வேறுபடுத்தி இனங்காண்பது நீண்ட நோக்கில் நன்மைகள் பயக்கும். குறிப்பாக இது தொடர்பான தண்டனையளித்தலின் போதும் வேறுபடுத்தி பரிசீலிப்பதற்கு இது மிகவும் துணைபுரியும். எதிர்காலத்தில் இப்பாகுபடுத்தல் மேலும் விரிவடையலாம்.
இச்சட்டத்திலேயே முதற் தடவை யாக "பாலியல் வல்லுறவு" எனும் பதம் தமிழில் பாவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப த்தில் தமிழில் 'கற்பழிப்பு" எனும் பதம் பயன்படுத்தப்பட்டபோது பெண்களுக்கு மட்டுமே கற்பின் தத்துவத்தை வலியுறு த்துவதாக அப்பதம் அமைந்திருந்ததாலும் பொருத்தமில்லாத சொல்லாக இருந்ததாலும் புதிய மாற்றுப் பதம் ஆக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பாக பெண்ணிலைவாதிகளால் கருத்தாடப்பட்டதைத் தொடர்ந்து "பாலியல் பலாத்காரம்" மற்றும் "பாலியல் வன்முறை" ஆகிய பதங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இப்பதத்தை அறிமுகம் செய்ததில் "சரிநிகர்" பத்திரிகைக்கு மிகுந்த பங்குண்டு. ஆனாலும் 'பாலியல் பலாத்காரம்" மற்றும் "பாலியல் வன்முறை" ஆகிய பதங்களில் "பாலியலுறவு" என்பது உள்ளடக்கப்படவில்லை என பல பெண்ணிலைவாதிகளால் பேசப்பட்டது. இந்நிலையில் தமிழீழ ஒறுப்புச்சட்டம் அறிமுகப்படுத்தியிருக்கிற "பாலியல் வல்லுறவு" எனும் பதத்தில் பாலியல் (ளநஒரயட) + வன்மை (எழைடநnஉந) + உறவு (iவெநசஉழரசஉந) ஆகிய மூன்று விடயமும் உள்ளார்ந்திருப்பதால் இப்பதமே பொருத்தமானது என்பதைப் பலர் ஏற்றுக் கொள்கின்றனர். சில வேளைக ளில் இதை விட நல்ல பதம் எதிர் காலத்தில் கண்டுபிடிக்கப்படலாம்.
இயற்கைக்கு முரணான பாலியல் உறவு
எவரேனும் ஆணுடன் அல்லது பெண்ணுடன் அல்லது ஏதேனும் விலங்குடன் இயற்கை இயல்புகளுக்கு முரணாக உடலுறவு கொள்ளும் எவரும் 10 ஆண்டுகள் வரை இருவகையிலொருவகை சிறைத் தண்டனையுடன் குற்றக்காசிறுப்புக்ளும் உள்ளாதல் வேண்டும் என கூறுகிறது. (Pஊவுநு -சரத்து-(286))
இதில் 'இயற்கை இயல்புக்கு முரண்" என எதனை வறையறுத்திருக்கின்றனர் என்பதை குறிப்பிடாதது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
இன்று பெண்களது விடுதலைக்கு தடையாக இருக்கும் முக்கிய ஒரு பிரச்சினையாக பாலியல் சுரண்டல் பாலியல் உறவுக் கட்டுப்பாடு என்பன காணப்படுகிறது. இந்நிலையில் மேற்குலக நாடுகளில் பெண்களின் பாலியல் தேவை பாலியல் சுரண்டலிலிருந்து விடுதலையடைதல் என்பன அங்கு புதிதாக விஞ்ஞான ரீதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயற்கை பாலியல் புணர்வு முறைகள் அறிமுகமானதிலிருந்து சில வளர்ச்சிகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. மரபு ரீதியிலான கருத்தியல் கட்டுப்பாடு நிலவும் நாடுகளுக்கு இவை வழக்கத்துக்கு வர சில காலமெடுக்கக் கூடும். எனவே இயற்கைக்கு மாறாக உறவு கொள்தல் கூடாது என கூறுவது பெண்களது மட்டுமல்ல ஆண்களி னதும் சுதந்திர இயல்புகளினதும் மீதான மோசகரமான கட்டுப்பாட்டு திணிப்பாகும். பரத்தமை
'பரத்தமை" (விபச்சாரம்) பற்றி இன்னமும் நமது சமூகத்தில் நிலைபெற்றிருக்கிற கருத்தியல் காரணமாக பரத்தமையை குற்றத்திற்குரிய ஒன்றாகவே காண்கிறதே ஒழிய அதற்கான ஒட்டு மொத்தமான சமூக நிர்ப்பந்தத்தை இனங் காண்பதில் தவறிழைத்தே வருகிறது.
பரத்தமையில் ஒரு பெண் ஈடுபடுவதற்குக் காரணமாக பெண்ணின் பாலியல் மேலுணர்வை கொள்ள முடியாது. அதற்கான சமூகச் சூழலே பரத்தமை நிலையினை அடையக் காரணமாக இருக்கிறது. எனவே, அந்தச் சூழல் மாற்றியக்கப்படாதவரை இவற்றிற்கான தீர்வுமில்லை.
''காசு நோக்கத்திற்காக ஒரு பாலார் மறுபாலாருடன் உடலுறவு கொள்ளுதல் 'பரத்தமை" தவறாகும். இத்தவறுக்கு நான்கு ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய இருவகையிலொருவகை சிறையொறுப்பு வழங்கப் படுதல் வேண்டும்." (Pஊவுநு -சரத்து (481),(420))
பரத்தமை விடயத்தில் எப்போதும் பெண்ணே தண்டிக்கப்பட்டு வரும் இயல்பை நாம் காணலாம்.
;;;;''பணம் கொடுத்து பாலியல் புணர்ச்சிக்கு அழைப்பதற்கு ஆண்கள் தயாராக இருக்கும் போது பெண் மட்டும் ஏன் தண்டிக்கப்படுகிறாள்?" என வினவுகிறார் பெண்ணிலைவாதிகளில் ஒருவரான சுனிலா அபேசேகர.
இக்கேள்வியின் நியாயத்தன்மை சரியானதே. லஞ்சக் குற்றச்சாட்டின் போதெல்லாம் லஞ்சம் வாங்கியவரை மட்டுமல்லாது லஞ்சம் வழங்கிய வரையும் தண்டிக்கும் இந்த சட்டங்கள் பரத்தமை விடயத்தில் மாத்திரம் பரத்தமையை தூண்டும் ஆண்களைத் தப்ப விட்டுவிட்டு பெண்களை மட்டும் தண்டிப்பது மிக மோசமான நடைமுறை.
மேலும் 'விபச்சாரி" அல்லது 'வேசி" என்று இறுதியில்தூற்றப்படும் செய்கை கூட பெண்களுக்கு எதிராக மாத்திரமே பாவிக்கப்படுகிறது. இவ்வகையான பதப் பிரயோகம் கூட ஆண் மேலாதிக்க த்தை வெளிப்படுத்தும் பதப் பிரயோ கமே. அப்பதங்களை பெண்கள் மீது மட்டுமே பிரயோகிக்க ஆணாதிக்கம் முயல்கிறது.
ஆண்கள் பல பெண்களுடன் பாலியலுறவில் ஈடுபட்டால் அவனை ''விபச்சாரன்" அல்லது ''பரத்தன்" போன்ற பதங்களைப் பாவிப்பதற்கான தமிழ்ச் சொல் வழக்காடல் இன்னமும் இல்லை. பெண்ணே தொடர்ந்தும் ஏசப்படலுக்குள்ளாகிறாள்.
இப்படி ''தமிழீழ ஒறுப்புச் சட்டம்" தயாரிக்கப்படும் போது பெண்கள் தொடர்பான விடயங்களில் அசட்டை யாகவே இருந்துள்ளனர் என ஒடுக்கப் படும் பெண்ணினம் குற்றம் சுமத்துவதை இலகுவாக மறுதலிக்க முடியாதே.
ஒறுப்புச் சட்டத்தில் இதுவரை காணாத பல புதிய நல்ல கருத்துக்களுடன் கூடிய சட்டமியற்றல் நடைபெற்றிருக்கிற போதும் சிற்சில பலவீனங்களை உள்ளடக்கியிருப்பதை உணராது விட முடியாது. அதிலுள்ள "பெண்கள்" பற்றிய சிறு மதிப்பீடு மட்டுமே இதில் அடங்கியிருக்கிறது.
முழுமையாக அவை விமர்சனத்துக்கும் திருத்தங்களுக்கும் உள்ளாக வேண்டியதன் அவசியத்தை சம்பந்தப்பட்டவர்கள் உணர்வார்களாயின் ஆரோக்கியமான நகர்வுக்கு அவை சிறிதளவாவது வழி சமைக்கும்.
(1996 - ஏப்ரல் 20 சரிநிகர்)
மேலும் வாசிக்க...